• August 19, 2019
0 Comments

பெரம்பலூர்:

கணவர் திட்டியதால் விஷம் குடிப்பது போல டிக்-டாக்கில் காணொளி பதிவிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிக்-டாக் செயலி மூலம் வெளியாகும் வீடியோக்கள் சமூகத்தில் சீரழிவுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவற்றில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ஆபாச வசனம், அளவுக்கதிகமான கவர்ச்சி உடைகளில் வெளியாகும் இந்த வீடியோக்களை பலர் ரசித்து தங்களது கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர். பழனிவேலு சிங்கப்பூரில் பணியாற்றி வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி கிளம்பியது .

தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் பண்ணி கொடுக்காமல் டிக்-டாக் காணொளியில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை வாங்கி வந்துள்ளார். அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்துள்ளார் . இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அனிதா இருந்துள்ளார். இந்த தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அந்த முடிவை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் காணொளியாக பதிவு செய்தார். வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை அடைகிறது. இவ்வாறு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டு வருகிறார்கள்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *