பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

0

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம் என்ற இடத்தில் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம் அந்நாட்டின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படுகிறது.

இந்த தேவாலயத்துக்கு ஓவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கிறார்கள். கத்தோலிக்க மக்கள் புனித வாரத்தை கொண்டாட கடைபிடித்து வருகிற நிலையில், தேவாலயத்தின் சுவரில் ஏற்பட்டிருந்த கீறல்களை சரிசெய்ய, கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகள் தொடங்கின.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தேவாலயத்தில் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ, தேவாலயம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மிகவும் ஆக்ரோஷமாக பற்றி எரிந்த தீயால் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன.

இதையடுத்து, நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் முழு மூச்சுடன் இறங்கினர். தீ விபத்து குறித்து தெரியவந்ததும், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

இதற்கிடையில், 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணிக்கு தேவாலயத்தில் எரிந்த தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.