மெது அடை செய்வது எப்படி? – Dinaseithigal

மெது அடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சரிசி – அரை கப்
புழுங்கலரிசி (இட்லி அரிசி) – அரை கப்
துவரம் பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
பூண்டு – 4 (அ) 6
தேங்காய் – ஒரு மூடி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் – அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 15
உப்பு – ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு
தாளிக்க – நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு

செய்முறை

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசி வகைகளைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். (பருப்பு வகைகளை ஹாட் பாக்ஸில் ஊற வைத்தால் நன்றாக ஊறிவிடும்).

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிதளவு தேங்காயைப் பொடியாக (பல் பல்லாக) நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காயைத் துருவி வைக்கவும். அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஊறியதும் நன்றாகக் களைந்துவிட்டு அரிசியைத் தனியாகவும், பருப்பு வகைகளைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். (பருப்பை மிகவும் மசிய (நைசாக) அரைக்க வேண்டாம்).

சிவப்பு மிளகாயுடன் உப்பு, தோல் சீவிய இஞ்சி, தோலுரித்த பூண்டு, சீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் பருப்பு மாவு, மிளகாய் விழுது சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் துருவிய தேங்காய், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். (உப்பு, உறைப்பு சரி பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பும், சிவப்பு மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொள்ளலாம்). மீதமிருக்கும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

தோசைக் கல்லை நன்றாகக் காயவிட்டு, கலந்து வைத்துள்ள அடை மாவை எடுத்து ஊற்றவும். அதன் மேல் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, சிறு பற்களாக நறுக்கி வைத்துள்ள தேங்காயைத் தூவி, இரண்டு பக்கமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான அடை தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *